அமேசான் நிறுவனரின் புதிய முயற்சி – கொதித்தெழுந்த எலான் மஸ்க்
புதிய செயற்கை நுண்ணறிவு முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அமேசான் நிறுவனரை, டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் நிறைவேற்று அதிகாரியான எலான் மஸ்க் (Elon Musk) Copy Cat என்று விமர்சித்துள்ளார்.
அமேசானின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெப் பெசோஸ் (Jeff Bezos) புராஜெக்ட் புரோமிதியஸ் (Project Prometheus) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்துள்ளார்.
விஞ்ஞானியான விக் பஜாஜ் (Vik Bajaj) உடன் இணைந்து இந்த நிறுவனத்தை பெசோஸ் வழிநடத்தவுள்ளார்.
புதிய AI தளம் குறித்த பெசோஸின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எலான் மஸ்க் தனது சமூக ஊடகத் தளமான எக்ஸில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் முதலில், “Haha no way” என்று சிரிக்கும் ஈமோஜியைப் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து, “copy 🐈” என்று மற்றொரு பதிவை இட்டார். இந்த மறைமுகமான விமர்சனம், பெசோஸ், மஸ்க் ஏற்கெனவே தொடங்கியுள்ள xAI போன்ற நிறுவனங்களை பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டுவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் நேரடிப் போட்டியாளர்களாக உள்ள எலான் மஸ்க்கும் ஜெப் பெசோஸும் ஒருவரையொருவர் விமர்சிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.





