ஐ.நா. காலநிலை மாநாடு: இரு நாடுகளுக்கிடையில் கடும் போட்டி!
COP 31 காலநிலை மாநாட்டை தமது நாட்டில் நடத்துவதற்குரிய வாய்ப்பை பெறுவதில் ஆஸ்திரேலியா தீவிரம் காட்டிவருகின்றது. எனினும், மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றி கருத்து வெளியிட ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்குரிய ஐ.நா. காலநிலை (COP 31) மாநாட்டை பசுபிக் நாடுகளுடன் இணைந்து அடிலெய்டில் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.
அதேபோல துருக்கியும் வாய்ப்புகோரி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது.
இதனால் மேற்படி மாநாட்டை எங்கு நடத்துவது என்பது பற்றி இழுபறி நிலை நீடிக்கின்றது. பசுபிக் தீவு நாடுகள் ஆஸ்திரேலியா பக்கம் நிற்கின்றன.
COP30 காலநிலை மாநாடு பிரேசிலில் நடைபெற்றுவருகின்றது. இம்மாநாட்டின்போதே அடுத்த மாநாட்டை எங்கு நடத்துவது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவும், துருக்கியும் ஈடுபட்டுள்ளன.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஆவது மாநாட்டின் இறுதி நாளாகும். இதன்போது உறுதியான முடிவு எட்டப்படலாம் என ஆஸ்திரேலியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
முடிவு எடுக்கப்படாவிட்டால் மாநாட்டை நடத்துவதற்குரிய வாய்ப்பை ஜேர்மன் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





