ஆஸ்திரேலிய சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு 200 சதவீதம் அதிகரிப்பு
ஆஸ்திரேலியச் சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது.
கொவிட்-19 தொற்று நோய் தொடங்கியதிலிருந்து இந்தளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பல ஆண்டுகளாக 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காண்காணிக்கப்பட்டனர்.
இதன்மூலம் இளைஞர்களின் இணைய மோகம் இப்போது சாதனை அளவை எட்டியுள்ளதாக ஆய்வினை மேற்கொண்ட தென் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு முன்பு சிறுவர்களிடையே தினசரி சமூக ஊடகப் பயன்பாடு 26 சதவீதமாக இருந்தது. மேலும் 2022ஆம் ஆண்டளவில் இது வியக்கத்தக்க வகையில் 85 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஊரடங்குகள் மற்றும் சமூக இடைவெளி காரணமாக இளைஞர்கள் சமூக ஊடகங்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதே காலகட்டத்தில் கலை மற்றும் பொழுதுபோக்கிற்கான வாசிப்பும் குறைந்துள்ளது.
கலை நடவடிக்கைகளில் ஒருபோதும் பங்கேற்காத சிறுவர்களின் எண்ணிக்கை 26 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாகவும், ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காத சிறுவர்களின் எண்ணிக்கை 11 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.





