மலேசியாவில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த இன்ஸ்டாகிராம் கும்பல் – பெருந்தொகை பணம் மோசடி
மலேசியாவில் சூட்சுமமான மோசடியில் சிக்கிய பெண் ஒருவர் 291,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
ஜொகூர் பகுதியில் பகுதிநேரமாக வேலை செய்து மேலதிக வருமானத்தைப் பெற முயன்ற 56 வயதான பெண்ணே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார்.
குறித்த பெண் சமூக வலைத்தளங்களில் பகுதிநேர வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரம் ஒன்றைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் டெலிகிராம் (Telegram) மூலம் பணியாற்றுமாறு கும்பல் ஒன்றினால் பணிக்கப்பட்டுள்ளார்.
புகைப்படங்கள் தொடர்பான மதிப்பீடுகளை வழங்குவதே அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட பணியாகும்.
பணியை ஆரம்பிப்பதற்கு முன்னர் சில புகைப்படங்களை 1,000 முதல் 1,600 ரிங்கிட் கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும்.
அவ்வாறு செய்வதன் மூலம் மாதாந்தம் 58,000 ரிங்கிட் வருமானம் கிடைக்கும் என வேலை வழங்கும் கும்பலினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடியாளர்களின் அறிவுரைக்கமைய 22 தடவைகளில் 291,000 ரிங்கிட்டை அந்தப் பெண் செலுத்தியுள்ளார்.
மாத முடிவில் தனக்கான சம்பளத்தை வழங்குமாறு கோரியபோது, மேலும் 138,000 ரிங்கிட் செலுத்த வேண்டும் என மோசடி கும்பல் கேட்டுள்ளது.
இதன்போது தான் மோசடியாளர்களிடம் சிக்கியுள்ளதை உணர்ந்த பெண், காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், மோசடியாளர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





