நுகர்வோர் விலை உயர்வு – அதிகரிக்கும் அழுத்தம் – ட்ரம்ப் எடுத்த நடவடிக்கை
அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து நுகர்வோர் மத்தியில் கவலைகள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மாட்டிறைச்சி, கோப்பி மற்றும் பழங்கள் மீதான இறக்குமதி வரிகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் பல நாடுகள் மீது பரவலான இறக்குமதி வரிகளை டிரம்ப் விதித்திருந்தார்.
அந்த வரிகள் நுகர்வோர் விலையைப் பாதிக்காது என்று அவரது நிர்வாகம் கூறிவந்தது.
இந்த நிலையில், முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில் மீதான வரிகளே விலை உயர்வுக்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது.
யதார்த்தத்தில் விலைவாசி உயர்வு காணப்பட்டதால், தற்போது இந்த வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
ஈக்வடோர், குவாத்தமாலா, எல் சால்வடோர் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா அண்மையில் ஒப்பந்தங்களை எட்டியது.
இதனை தொடர்ந்து டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் அந்த நாடுகளிலிருந்து வரும் விவசாயப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க உதவுகின்றன.
பணவீக்கத்தைக் குறைத்து, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாக டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தாலும், அமெரிக்க மக்கள் தற்போது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மின்சாரத்துக்காக அதிக செலவு செய்து வருகின்றனர்.
இவ்வளவு நெருக்கடிகள் நிலவும் நிலையிலும், தனது கொள்கைகள் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து உறுதியாகக் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





