ஜப்பானில் கரடிகளால் அச்சுறுத்தல் – காவல்துறையினருக்குப் பெரிய துப்பாக்கி பயன்படுத்த அனுமதி
ஜப்பானின் அக்கித்தா (Akita) மற்றும் இவாத்தே (Iwate) வட்டாரங்களில் கரடித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, கரடிகளைப் பெரிய துப்பாக்கியால் சுடுவதற்கு காவல்துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கரடிகள் அண்மைக் காலமாக குடியிருப்பு வட்டாரங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. வீடுகள், பாடசாலைகள், பேரங்காடிகள் போன்ற இடங்களுக்குள் கரடிகள் நுழைவதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 13 பேர் கரடியால் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கரடிகளைக் கட்டுப்படுத்த முதலில் ஜப்பானியக் காவல்துறைக்குக் கைத்துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டன.
ஆனால், அவை கரடிகளைக் கொல்லும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவையாக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கித்தா வட்டாரத்தில் கரடிகளைக் கண்காணிக்கக் கடந்த வாரம் இராணுவத் துருப்புகளும் பணியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





