இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு – நெருக்கடியில் மக்கள்
இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை பாரிய அளவில் உயர்வடைந்துள்ளதால் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை விலங்குகள் நலச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார் 250,000 தெரு நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் சம்பா பெர்னாண்டோ இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண் நாய்கள் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி ஈனுவதால், தற்போது இலங்கையில் ஒவ்வொரு எட்டு மனிதர்களுக்கும் ஒரு தெரு நாய் என்ற விகிதத்தில், அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





