ஐரோப்பாவில் வரலாறு காணாத கடும் குளிர் ஏற்படும்! விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
ஐரோப்பா முழுவதும் வழக்கத்திற்கு மாறான வகையில் கடும் குளிரான காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களில் இல்லாத அளவு மிகவும் குளிரானதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் என ருமேனியாவின் வானிலை மற்றும் நீர்வளவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் புவி வெப்பமயமாதலால் (புவி வெப்பமடைதலால் அல்ல) இலேசான குளிர்காலங்கள் நிலவியது. எனினும், இந்த ஆண்டு நிலைமை மாற வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
பலவீனமடையும் துருவச் சுழல் காரணமாக ஐரோப்பா முழுவதும் வழக்கத்திற்கு மாறாகக் குளிர் மற்றும் பனிமூட்டமான வானிலைக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலத்த காற்று, கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் மிகவும் குளிராக இருக்கும்.
இந்த “மாறும் தன்மை கொண்ட” குளிர்காலம் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பா வாழ் மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள வெப்பமூட்டும் அமைப்புகளைச் சரிபார்த்துக் கொள்ளவும், வீட்டு எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதுடன், வானிலை எச்சரிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என வானிலை மற்றும் நீர்வளவியல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.





