தென்கொரிய கடற்பரப்பில் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் – பலர் மாயம்!
தென்கொரியாவின் தென்மேற்கு கடற்பகுதியில் சீன மீன்பிடி கப்பல் ஒன்று கவிழ்ந்து இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 09 பேர் நீரில் மூழ்கி மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகரமான கன்சானுக்கு (Gunsan) தென்மேற்கே சுமார் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் படகு கவிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கன்சானுக்கு (Gunsan) அருகிலுள்ள தென்மேற்கு நகரமான குவாங்ஜுவில் (Gwangju) உள்ள சீனத் துணைத் தூதரகம், படகில் 11 பேர் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய தகவல்களின்படி இரண்டு பணியாளர்கள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக தென் கொரியாவின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தேடுதலுக்கு உதவ நான்கு ரோந்து கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானம் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.





