சீனாவின் இராணுவ நடவடிக்கை தீவிரம் – கவலையில் ஜப்பான்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவது குறித்து ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்ஸூமி (Shinjiro Koizumi) கவலை வெளியிட்டுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) மற்றும் பிற பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டங்களுக்கு இடையே, சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜூனுடன் (Dong Jun) நடந்த சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதத்திற்கு பின்னர் இரு நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்த முதல் சந்திப்பில், “கிழக்கு சீனக் கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு வடிவங்களில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைவது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என கொய்ஸூமி குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு சீனக் கடலில் உள்ள சென்காகு தீவுகளுக்கு (Senkaku Islands) அருகே ஜப்பானிய வான்வெளியை அத்துமீறி நுழைந்தபோது, சீன கடலோர காவல்படை ஹெலிகாப்டர் ஜப்பானிய போர் விமானங்களுடன் மோதியது.
பசிபிக் பெருங்கடலின் மீது ஒரு சீன போர் விமானம், ஜப்பானிய தற்காப்புப் படை ரோந்து விமானத்திற்கு அசாதாரணமாக அருகில் பறந்ததாக ஜப்பான் கூறியது.
இதற்கு சீனா, ஜப்பானிய விமானம் சீனாவின் வழக்கமான இராணுவ நடவடிக்கைகளை நெருக்கமாக வந்து உளவு பார்த்தது என பதிலளித்தது. ஜூலை மாதத்திலும் கிழக்கு சீனக் கடல் மீது இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.





