நேபாளத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 07 பேர் உயிரிழப்பு – சிக்கலுடன் தொடரும் மீட்புபணி!
நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 07 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஐந்து வெளிநாட்டினர் மற்றும் இரண்டு நேபாளிகள் இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
டோலகா (Dolakha district) மாவட்டத்தில் உள்ள யாலுங் ரி மலையின் (Yalung Ri) அடிப்படை முகாமுக்கு அருகில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் இரண்டு இத்தாலியர்கள், ஒரு கனேடியர், ஜேர்மன் மற்றும் பிரான்ஸை சேர்ந்த இரண்டுபேர் இருப்பதாகவும், மீதம் இருந்த இருவர் பயண வழிக்காட்டியாக செயற்பட்ட நேபாளியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணியாளர்கள் இருவரின் உடல்களை மீட்டுள்ளதுடன் , மேலும் 05 பேரின் உடல்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 08 பேர் காயங்களுடன் காத்மாண்டுவில் (Kathmandu) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மலையேறுபவர்கள் அனைவரும் பனிச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு புறப்பட்ட குழுவில் இருந்தவர்கள் என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை மற்றும் தளவாடப் பிரச்சினைகள் காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதாகவும், இதனால் ஹெலிகாப்டர்களைப் பறப்பதோ அல்லது கால்நடையாக அந்த இடத்தை அடைவதோ கடினமாக இருந்ததாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிக்கலான சூழ்நிலையில் தொடர்ச்சியாக மீட்பு பணிகளை முன்னெடுக்க குழு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




