அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கான அனுமதிச் சீட்டைத் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறையை அரசு நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டவர்களுக்கு (அமெரிக்கர்களுக்கு) முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவர் திட்டவட்டமாக இருக்கிறார்.
இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கான EAD (Employment Authorization Document) எனப்படும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைத் தானாக நீட்டிக்கும் வசதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மற்றும் அதற்குப் பிறகு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைப் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு, இனி தானியங்கி நீட்டிப்பு வழங்கப்படாது.
பொதுமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பைக் காக்கும் விதமாக, மேலாண்மை மற்றும் தணிக்கைக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் தங்கள் வேலைக்கான அனுமதி காலம் முடிந்த பின்னரும், கூடுதலாக 540 நாட்கள் அமெரிக்காவில் பணியாற்ற, முந்தைய பைடன் (Biden) அரசு நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. தற்போது, அந்த நடைமுறைக்கு மாற்றாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.





