ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள பல நாடுகள்: ரஷ்யாவுக்கு காத்திருக்கும் நெருக்கடி
ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவில் புதிய நாடுகள் இணைத்துக்கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தமது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு, ரஷ்யாவுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மூன்று நாடுகளும் விண்ணப்பித்துள்ளன.
இந்த மூன்று நாடுகளும் ஒன்றியத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை (Geopolitical Significance) அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
உக்ரைன் மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை (Accession Talks) ஆரம்பிக்க உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
எனினும், ஜோர்ஜியா இன்னும் வேட்பாளர் நிலையில் மட்டுமே உள்ளது. ஒன்றியத்தில் இணைந்துகொள்வது பொதுவாக மிகவும் நீண்டதாகவும், கடினமானதாகவும், சீர்திருத்தங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
இதேவேளை, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா போன்ற மேற்கு பால்கன் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. அல்பேனியா, 2030ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை தமது இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.
பொதுவாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு இணைந்துகொள்ள, அதன் உறுப்பு நாடுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் சில நாடுகளின் அனுமதிக்காக உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் காத்திருக்கின்றன.
புதிய நாடுகளின் ஒன்றிணைவு மூலம் கிழக்கு ஐரோப்பாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மையையும், பொருளாதாரப் பிணைப்பையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





