சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் உறுதி
சுதந்திரமான இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை உருவாக்க ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள இரு நாடுகளின் தலைவர்களும் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பு உறவை வலுப்படுத்தல், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
“குவாட்” அமைப்பில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. அதேபோல இந்தியா , அமெரிக்கா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்குரிய ஒரு அமைப்பாக குவாட் கருதப்படுகின்றது.
சீன ஜனாதிபதியுடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த வாரம் பேச்சு நடத்தவுள்ளார். அதற்கு முன்னதாக ஜப்பானின் புதிய பிரதமரை ட்ரம்ப் மலேசியாவில் சந்திப்பாரென தெரியவருகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களின் சந்திப்பு முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது.
அதேபோல தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜப்பான் பிரதமருக்கு , ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி அழைப்பு விடுத்துள்ளார்.





