மருந்துகளுக்குக் கட்டுப்படாத சூப்பர்பாக்டீரியாக்கள் – ஆண்டுக்கு 50 லட்சம் உயிர்கள் ஆபத்தில்
மனிதகுலத்தின் மிகப்பெரிய மருத்துவக் கண்டுபிடிப்பான ஆன்டிபயாடிக் (Antibiotics) மருந்துகள் தங்கள் சக்தியை இழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருந்துகளுக்குக் கட்டுப்படாத ‘சூப்பர்பாக்டீரியாக்கள்’ (Superbactéries) பரவல், உலகை ஒரு கொடிய ஆபத்தின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது.
இதனால், சாதாரண காயங்கள் மற்றும் பொதுவான தொற்றுகள்கூட மரணத்தை விளைவிக்கும் கொடிய நோய்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு 6 பாக்டீரியா தொற்றுகளில் 1 தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாமல், அவற்றை எதிர்த்து நிற்கும் திறன் (RAM) கொண்டதாக இருந்தது தெரியவந்துள்ளது.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் உணவு உற்பத்தியில் அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் பயன்பாட்டால் இந்த எதிர்ப்புத் திறன் பன்மடங்கு பெருகிவிட்டது.
இந்த சூப்பர்பக்ஸ் தொற்றுகள் நேரடியாக 10 லட்சத்திற்கும் அதிகமான மரணங்களுக்கும், மறைமுகமாகவோ அல்லது ஒரு முக்கிய காரணியாகவோ கிட்டத்தட்ட 50 லட்சம் மரணங்களுக்கும் காரணமாகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2018 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும், கண்காணிக்கப்பட்ட ஆன்டிபயாடிக்குகளின் எதிர்ப்புத் திறன் 40 சதவீதத்திற்கு அதிகமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, இரத்தத்தில் கடும் தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான ஈ. கோலி (E.coli) மற்றும் கே. நிமோனியா (K.pneumoniae) போன்ற கிருமிகள் கவலை அளிக்கின்றன.
உலகளவில் 40 சதவீதத்திற்கு அதிகமான ஈ. கோலி தொற்றுகளும், 55 சதவீதம் கே. நிமோனியா தொற்றுகளும், அவற்றுக்கான மிக முக்கிய சிகிச்சையான மூன்றாம் தலைமுறை செபலோஸ்போரின் மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை.





