மீண்டும் வந்தார் வடிவேல் சுரேஷ்: அரசுக்கு ஐஸ் வைப்பு!

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“சம்பள நிர்ணயசபைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். எனினும், அது நடக்கவில்லை. இருந்தாலும் நாம் பொறுமை காக்கின்றோம். ஜனாதிபதி தான் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்தபோது அடிப்படை நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன்.” என்றார் வடிவேல் சுரேஷ்.