மெக்சிகோவில் (Mexico) வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வு, பலர் மாயம்

கடந்த வாரம் மத்திய மற்றும் கிழக்கு மெக்சிகோவைத்(Mexico) தாக்கிய பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் திங்களன்று(13) தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதற்கும் தேசிய மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருவதாக மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம்(Claudia Sheinbaum) தெரிவித்தார்.
முதற்கட்ட மதிப்பீடுகளின்படி சுமார் 100,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஜனாதிபதி ஷீன்பாம் கூறினார். மேலும் எல்லா சந்தர்ப்பங்களிலும், அரசாங்கம் ஆதரவை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெராக்ரூஸ் மாநிலத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பதிவாகியுள்ளது, இது பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையாகும்.
வெராக்ரூஸ்(Veracruz), பியூப்லா(Puebla) மற்றும் ஹிடால்கோவில்(Hidalgo) உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக விமானப்படை விமானப் பாலங்களை( air bridges) அமைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாலைகள், மின் இணைப்புகள் மற்றும் பொது சேவைகளை சரிசெய்வதோடு, தங்குமிடம், உணவு, சுத்தமான நீர் மற்றும் மருத்துவ சேவையை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.