ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க நேரிடும்; ட்ரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை, விரைவில் முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை(Tomahawk missile) வழங்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவை எச்சரித்துள்ளார்.
அத்துடன் டோமாஹாக் ஏவுகணை(Tomahawk missile) 2,500 km வரை சென்று தாக்கக்கூடியது என்பதுடன், இதனை ரஷ்யா நிச்சயமாக விரும்பாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த ரஷ்யா, உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகள் வழங்கப்பட்டால் அது அனைவருக்கும், குறிப்பாக ட்ரம்ப்பிற்கு முக்கிய பிரச்சினையாக அமையும் என தெரிவித்துள்ளது.
டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைன், அமெரிக்காவிடம் அனுமதி கோரியுள்ள நிலையில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.