சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்ற நபருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அவர் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மேல்முறையீடு மற்றும் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் போதைப் பொருளை கடத்துவது பாரிய குற்றமாக கருதப்படுகிறது. 15 கிராமுக்கு அதிகமாக போதைப்பொருளை கடத்தப்படும் பட்சத்தில் மரண தண்டனை விதிக்கப்படும்.
முன்னதாக போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் தட்சிணாமூா்த்தி கந்தையாவுக்கு (39) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





