கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் இழப்பீடு அறிவிப்பு!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பொலிஸாரிடம் அனுமதி கோரியுள்ளதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவித்துள்ளன.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையை தொடர்ந்து மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கரூரில் பிரச்சாரம் நடந்த பகுதி குறுகலான பாதை எனவும், ஒரு விசாலமான பகுதியை அரசாங்கம் ஒதுக்கித் தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பிரச்சாரத்தின் நடுவில் நான்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் பயணித்தது தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன. நேரில் பார்த்த சிலர் கூட்டத்திற்குள் புகுந்த சிலர் வேண்டுமென்றே மக்களை தள்ளியதாகவும், கால்களால் மிதித்ததாகவும் கூறுகின்றனர்.
இது தொடர்பில் ஆளும் அரசாங்கமும் பதிலளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





