மார்ச் தேர்தலுக்கு முன்னதாக நேபாள இடைக்கால அமைச்சரவையில் புதிதாக 3 அமைச்சர்கள் நியமனம்

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுஷிலா கார்கி புதிய அமைச்சரவையைத் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அறிமுகப்படுத்தினார்.அவர்களில் மூவர் சீர்திருத்தவாதிகள். மூவரும் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டவர்கள்.
அண்மையில், நேப்பாளத்தில் ஊழலை எதிர்த்து வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களை அந்நாட்டு இளையர்கள் கட்டவிழ்த்தனர்.இதில் குறைந்தது 72 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.அத்துடன் ஆட்சியும் கவிழ்ந்தது.
இந்நிலையில், ஊழல் ஒழிக்கப்படும் என்று முன்னாள் தலைமை நீதிபதியான கார்கி சூளுரைத்துள்ளார்.
இடைக்கால அமைச்சரவையில் நிதி அமைச்சராகத் ராமேஷ்வர் பிரசாத் கனால் பொறுப்பேற்றுள்ளார்.முன்னாள் நிதிச் செயலாளரான கனால், அண்மையில் முக்கியப் பொருளியல் சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்த குழுவுக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எரிசக்திப் பயனீட்டுத்துறையின் தலைவரான குல்மான் கிசிங், எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமை வழக்கறிஞரும் தலைநகர் காட்மாண்டுவின் மேயருடைய ஆலோசகருமான ஓம் பிரகாஷ் ஆர்யால் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் நலனுக்காகச் சட்ட ரீதியாகப் போராடியவர்.