சூதாட்ட செயலியால் சிக்கல் : வசமாக சிக்கும் பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா

ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான பணமோசடி வழக்கில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவையும், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரவர்த்தியையும் அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பி அழைத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதை நம்பி பயன்படுத்திய பலர் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி, தற்கொலை செய்யும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது.
முன்னதாக ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்கள் விளம்பரம் செய்தனர். இதுகுறித்து அமலாக்கத்துறையினர் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை செய்ய முடிவு செய்து, அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 15 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. ஊர்வசி ரவுத்தேலா செப்டம்பர் 16ஆம் தேதி, மிமி சக்ரவர்த்தி செப்டம்பர் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.