அதிரடியாக சின்னத்திரையில் களமிறங்கும் பார்த்திபன்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ளார். தற்போது டி.வி. தொடர் ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.
தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் ‘பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்’ என்ற நிகழ்ச்சியை செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் அவர் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், ‘‘பொதுவாக கொலை குற்றங்களை செய்ய உடந்தையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை. அதேபோல் நல்லது செய்யத் தூண்டுபவர்களுக்கு புண்ணியம் அதிகம். அந்தவகையில் அதிக புண்ணியம் எனக்கு கிடைக்கும் என்பதால் தான் இதற்கு ஒத்துக்கொண்டேன்.
அப்துல் கலாமுக்கும் எனக்கும் இடையே நிறைய உணர்வுப்பூர்வமான அன்பு இருக்கிறது. நடிகர் விவேக்கை அதிகம் ‘மிஸ்’ செய்கிறேன். ஒருவேளை விவேக் உயிருடன் இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சியை அவரைத்தான் செய்ய சொல்லியிருப்பேன். எனக்கு வாய்ப்பளித்த ஏ.டூ.இசட். லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், காமென் ஸ்போர்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களுக்கு நன்றி.
சினிமாவே ஒரு மிகப்பெரிய அறிவியல் அதிசயம் தான். அதில் சாதிக்க நினைத்து பல இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். எனக்கு அறிவியல் பெரிதாக தெரியாது. ஆனால் அறிவியல் உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்” என்றார்.