SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு செல்லும் மியான்மர் ராணுவத் தலைவர்

மியன்மாரின் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலெய்ங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தெரிவித்தது.
சீனாவின் ஆதரவைக் கொண்டுள்ள மியன்மாரில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராணுவத் தலைவரின் பயணம் இடம்பெறவுள்ளது.
அமைதிக்கான நோபெல் பரிசுபெற்ற ஆங் சான் சூச்சி தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை 2021ல் ராணுவம் ஆட்சியிலிருந்து கவிழ்த்ததைத் தொடர்ந்து மியன்மாரில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இது, முன்னெப்போதும் இல்லாத ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கும் நாட்டின் பரந்த பகுதிகளை ஆட்கொண்ட உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில், சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கும் உச்சநிலை மாநாட்டில் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹிலெய்ங் பங்கேற்பார் என்று மியாவடி தொலைக்காட்சி தெரிவித்தது.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, வியட்னாமியப் பிரதமர் பாம் மின் சின் உள்ளிட்டோரும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.