ஆசிய கோப்பையில் பும்ரா விளையாட வேண்டும் – ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் ஆசிய கோப்பை 2025 அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்தார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பும்ரா உடல் தகுதியுடன் இருந்தால், முக்கியமான போட்டிகளில் அவர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று கூறினார்.
இந்திய அணியின் ஆசிய கோப்பை பயணம் செப்டம்பர் 10, 2025 அன்று தொடங்க உள்ளது. ஆசிய கோப்பை 2025, செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன, அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, ஏ குழுவில் ஓமன், பாகிஸ்தான், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றுடன் இடம்பெற்றுள்ளது. பி குழுவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், மற்றும் இலங்கை உள்ளன. தொடரின் முதல் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் இடையே நடைபெறும்.
இந்திய அணி தனது முதல் போட்டியை செப்டம்பர் 10 அன்று UAE-க்கு எதிராக விளையாடும். தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளன. இந்தியாவின் குழு நிலைப் போட்டிகள் செப்டம்பர் 19 அன்று ஓமனுக்கு எதிராக முடிவடையும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் ஆசிய கோப்பைக்கான அணியை அறிவிக்கவில்லை, ஆனால் ஆகஸ்ட் 19 அன்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் அணியை அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆகாஷ் சோப்ரா, பும்ராவை “ஒரு தலைமுறை திறமை” என்று புகழ்ந்தார்.
இது குறித்து பேசிய அவர் “பும்ரா உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். ஆசிய கோப்பையில் அவர் உடல் தகுதியுடன் இருந்தால், முக்கிய போட்டிகளில் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும்,” என்று அவர் கூறினார். பும்ராவின் திறமையும், அவரது பங்களிப்பும் இந்திய அணிக்கு முக்கியமானது என்று சோப்ரா வலியுறுத்தினார். அவரை போல ஒரு பந்துவீச்சாளர் இந்த முக்கியமான போட்டியில் இருந்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.