ஜம்மு-காஷ்மீரில் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 3 CRPF ஜவான்கள் பலி, 15 பேர் காயம்

மத்திய ரிசர்வ் போலிஸ் படையினர் (CRPF) சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், மேலும் 12 பேர் காயமுற்றனர்.இவ்விபத்து இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பசந்த்நகர் பகுதியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) நேர்ந்தது.அந்த வாகனம் சாலையிலிருந்து விலகிச் சென்றோடி, ஆழமான பள்ளத்தில் விழுந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கியதாக உதம்பூர் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தீப் பட் கூறினார். காயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக அவர் சொன்னார்.
விபத்து குறித்து மத்திய அறிவியல், தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “கந்த்வா – பசந்த்நகர் பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான தகவல் கவலையளிப்பதாக உள்ளது. அவ்வாகனத்தில் துணிச்சல்மிக்க வீரர்கள் பலர் பயணம் செய்தனர்,” என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.துணை ஆணையர் சலோனி ராய் நிலைமையை மேற்பார்வை செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த CRPF படையினர் பசந்த்நகர் பகுதியில் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பியபோது, காலை 10.30 மணியளவில் விபத்து நேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.அவ்வாகனத்தில் 23 வீரர்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.
“மீட்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. உள்ளூர்வாசிகளும் முன்வந்து அப்பணியில் கைகொடுத்தனர்,” என்றும் அமைச்சர் சிங் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் ஜெனர் மனோஜ் சின்ஹா விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
“CRPF வீரர்களின் உயிரிழப்பால் வருத்தமடைந்துள்ளேன். உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினர்க்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டிக்கொள்கிறேன். அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று அவர் தமது எக்ஸ் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
விபத்திற்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. விசாரணை தொடர்கிறது.