சீனாவின் உள்ளங்கையை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்
சீனாவில் தொழில்நுட்பத் துறை முன்னேற்றம் கட்டணம் செலுத்தும் முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பெய்ச்சிங் நகரில் உள்ளங்கையை ‘ஸ்கேன்’ செய்து கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டாசிங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ச்சிங் செல்லும் ரயில் சேவைக்குக் கட்டணம் செலுத்த அதைப் பயன்படுத்தலாம்.
அதற்கு உள்ளங்கை அடையாள முன்பதிவு அவசியமாகும். ஒருமுறை பதிந்துகொண்டால் போதும். புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. WeChat செயலி மூலம் அதற்கான அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் உள்ளங்கை அடையாளப் பதிவுச் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள் உள்ளங்கையைக் கருவியின் மேல் காட்டினால் போதும். ரேகையை ஸ்கேன் செய்து WeChat கணக்கிலிருந்து பணம் கழித்துக் கொள்ளப்படும்.
உள்ளங்கை ரேகை உறுதி செய்யப்பட்டதும் ரயில் நிலையத்துக்குள் நுழையும் முகப்பின் வழி திறக்கும் என்று சீனாவின் Tencent நிறுவனம் கூறியது.
பயனீட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாக்க தரவு மறைக்கும் தொழில்நுட்பம் (Data encryption technology) பயன்படுத்தப்படுகிறது.