தைவானைச் சுற்றி அதிகரித்த இராணுவ நடவடிக்கை – சீனாவை குற்றம் சுமத்தும் அமெரிக்கா

தைவானைச் சுற்றி சீனாவின் அதிகரித்த இராணுவ நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.
தைவானின் வருடாந்திர ஹான் குவாங் இராணுவப் பயிற்சிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் அறிக்கை வந்தது.
தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, வியாழக்கிழமை மட்டும் தைவானுக்கு அருகில் 41 சீன இராணுவ விமானங்களும் எட்டு கடற்படைக் கப்பல்களும் இயங்குவது கண்டறியப்பட்டது.
விமானங்களில், 27 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் மையக் கோட்டைக் கடந்து, தீவின் வடக்கு, மத்திய மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது.
ஊடுருவலைக் கண்காணிக்க தைவானின் ஆயுதப் படைகள் ரோந்து விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் கடலோர ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தி பதிலளித்ததாக தைபே பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
தைவானைச் சுற்றி சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ அழுத்தம் பொறுப்பற்றது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தைவானின் மத்திய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சீனாவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அமெரிக்கா கூறியது.