இந்தோனேசியாவின் பாலி அருகே படகு மூழ்கியதில் நால்வர் பலி,30 பேர் மாயம்

இந்தோனேசிய பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் நான்கு பேர் இறந்தனர், 30 பேர் காணாமல் போயினர், 31 பேர் உயிர் தப்பினர் என்று அந்த நாட்டின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
65 பயணிகளைக் கொண்டிருந்த அக்கப்பல் புதன்கிழமை (ஜூலை 2) நள்ளிரவுக்கு சற்று நேரத்துக்கு முன்பு மூழ்கியது. ஜாவா மாநிலத்திலிருந்து அக்கப்பல் பாலி சென்றுகொண்டிருந்தது.
சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார் என்று அமைச்சரைச் செயலாளர் டெடி இந்திரா விஜாயா வியாழக்கிழமை (ஜுலை 3) அறிக்கையில் தெரிவித்தார். மோசமான வானிலை காரணமாக விபத்து நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கப்பலில் இருந்தோரில் 53 பேர் பயணிகள் என்றும் 12 பேர் ஊழியர்கள் என்றும் சுரபாயா தேடல், மீட்பு அமைப்பு தெரிவித்தது. தேடல் பணிகளில் கைகொடுக்க சுரபயாவிலிருந்து ஒரு மீட்புக் குழுவும் காற்றால் அடைக்கப்படக்கூடிய மீட்புப் படகுகளும் அனுப்பப்பட்டன.
கடைசி நிலவரப்படி உயிர் பிழைத்த நால்வர், மூழ்கிய கப்பலில் இருந்த உயிர்காப்புப் படகைக் கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொண்டனர். அவர்கள் வியாழக்கிழமை அதிகாலை நீரில் காணப்பட்டனர் என்று சுரபாயா தேடல், மீட்பு அமைப்பு தெரிவித்தது.
மூழ்கிய கப்பல் 22 வாகனங்கள், 14 லாரிகள் ஆகியவற்றையும் ஏற்றிச் சென்றதாக அமைப்பு குறிப்பிட்டது.
கப்பல் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டதற்கும் கூடுதலானோர் அதில் இருந்தனரா என்பதைத் தெரிந்கொள்ளும் முயற்சிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தோனீசியாவில் அவ்வாறு நிகழ்வது அடிக்கடி நடக்கும் ஒன்றாகும்.கப்பலில் வெளிநாட்டவர் இருந்தனரா என்பது தெரியவில்லை.