ஆஸ்திரேலியாவில் 1,200 குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரிசோதனை செய்ய சுகாதார அதிகாரிகள் பரிந்துரை

ஆஸ்திரேலியாவில் 1,200 குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரிசோதனை நடத்த ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தைப் பராமரிப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது 12க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகளின் அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
மெல்பர்னைச் சேர்ந்த 26 வயது ஜோஷுவா பிரவுன் என்பவர் மே மாதம் கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தது. அவர் மீது, 70க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவரது பாலியல் துன்புறுத்தலில் ஐந்து மாதம் முதல் இரண்டு வயது வரையிலான எட்டுக் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையில் கார்டன் இயர்லி லேர்னிங் சென்டரில் குற்றச்செயல்கள் நடந்தன.புரவுன் கைது செய்யப்பட்டதிலிருந்து விசாரணையை விரிவுபடுத்தியிருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
ஜனவரி 2017லிருந்து 2025 மே வரையில் மெல்பர்னில் உள்ள 20க்கும் மேற்பட்ட பாலர் பராமரிப்பு நிலையங்களில் அவர் வேலை பார்த்துள்ளார்.
மெல்பர்னில் உள்ள இரண்டாவது பராமரிப்பு நிலையத்தில் நடந்த மற்றொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.
விக்டோரியா மாநிலத் தலைமை சுகாதார அதிகாரியான கிறிஸ்டியன் மெக்கிராத், 2,600 குடும்பங்களுடன் தொடர்புகொண்டு 1,200 குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரிசோதனை நடத்த பரிந்துரைக்கப்பட்டது என்றார்.
“இந்தச் சூழ்நிலையில் இது கவலைக்குரிய அம்சமாகும். இந்த விவகாரத்தை முன்னெச்சரிக்கையுடன் அணுகி வருகிறோம்,” என்று அவர் மேலும் சொன்னார்.