அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு கட்டுப்பாடு – வகுப்புகளை புறக்கணித்தால் விசா இரத்து

அமெரிக்காவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அமெரிக்காவில் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வருகிறது.
அதன்கீழ் அதிரடி நடவடிக்கைகள் பல அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நேற்று இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு இடைநிற்றல் அல்லது வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாமல் புறக்கணித்தல் அல்லது பள்ளி, கல்லூரி நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் தாங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பிலிருந்து இடைநிற்றல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விசா திரும்பப் பெறப்படும்.
மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு செல்வதற்கான எந்தவொரு விசாக்களையும் பெற முடியாத, தகுதியிழக்கும் சூழலுக்கும் மேற்கண்ட மாணவர்கள் ஆளாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.