மேற்கு தாய்லாந்தில் போலீஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

தாய்லாந்தில் காவல்துறை ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி வெடித்தது.
தென் தாய்லாந்தில் சனிக்கிழமை (மே 24) நேர்ந்த இச்சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சனபுரி காவல்துறை விமானப் படைக்குச் சொந்தமான அந்த பெல் 212 ஹெலிகாப்டர் பிரச்சாவ்ப் கிரி கான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது.
அதில் இருந்த விமானிகள் இருவரும் பழுதுபார்ப்புப் பணியாளர் ஒருவரும் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரில் வெடித்ததால் மூண்ட தீயை தீயணைப்பாளர்கள் அணைத்ததாக மீட்புப் பணியாளர்கள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஆனால், இச்சம்பவத்துக்குப் பின்னால் உள்ள காரணம் இன்னும் தெரியவில்லை.
சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் காவல்துறைத் தலைவர் கிட்ராட் பன்ஃபெட் உத்தரவிட்டார் என்று தாய்லாந்து தேசிய காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.