ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் – உயரும் கச்சா எண்ணெய் விலை

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது.
காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார். இஸ்ரேல் படையினர் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை 1%க்கும் அதிகமாக உயர்ந்தன. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:
இஸ்ரேலின் தலைமை அத்தகைய தாக்குதலை நடத்த இறுதி முடிவை எடுத்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது பற்றிய தகவல்களால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 1 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். விலையும் தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.