காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல்

காஸாவுக்கு மனிதநேய உதவிப் பொருள்களையும் ஆர்வலர்களையும் ஏற்றிச் சென்ற கப்பல் மீது வெள்ளிக்கிழமை (மே 2) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல் மால்டாவுக்கு அருகே அனைத்துலகக் கடற்பரப்பில் இருந்தபோது ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைத்துலக அரசு சாரா அமைப்பான ‘த ஃப்ரீடம் ஃப்லோட்டில்லா கோயலிஷன்’ கூறியது.
ஒரு கப்பல் தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளியை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் தாக்குதலுக்கு யார் காரணமாக இருக்கக்கூடும் என்ற தகவலை அது வெளியிடவில்லை.
தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக உடனடித் தகவல் இல்லை.
“கப்பலின் மின்னுற்பத்திக் கருவியைக் குறிவைத்து ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தின. அந்தக் கப்பல் இப்போது மூழ்கிவிடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதில் அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்கள் 30 பேர் பயணம் செய்கின்றனர்,” என்று அமைப்பு அதன் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.
மால்டாவுக்குக் கிழக்கே 17 கடல்மைல் தொலைவில் இருந்தபோது அந்தக் கப்பல் உதவி கோரி அழைப்பு விடுத்ததாகவும் அதையடுத்து மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் உதவிக் கப்பலை அனுப்பியதாகவும் அமைப்பு கூறியது.
‘த ஃப்ரீடம் ஃப்லோட்டில்லா கோயலிஷன்’ அமைப்பு காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறது.