அனைத்துலக மாணவர் விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்த ஆஸ்திரேலிய ஆளும் கட்சி உறுதி

மீண்டும் பதவிக்கு வந்தால் அனைத்துலக மாணவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தப்போவதாக ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிற்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்து உள்ளது.
தற்போது A$1,600ஆக உள்ள விசா கட்டணத்தை to A$2,000க்கு (S$1,680) உயர்த்துவதால் அடுத்த நாலாண்டுகளுக்கு A$760 மில்லியன் வருவாய் கிடைக்கும் என்று ஆஸ்திரேலிய நிதி அமைச்சர் கேத்தி கேலகர் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மே 3ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருவாட்டி கேத்தியின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் அனைத்துலக மாணவர்களுக்கான விசா கட்டணம் A$710ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அது A$1,600 என இருமடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டது.
தான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை குறைந்தபட்சம் A$2,500க்கு உயர்த்த இருப்பதாக ஆஸ்திரேலியாவின் பழமைவாத எதிர்க்கட்சி ஏற்கெனவே வாக்குறுதி அளித்து உள்ளது.
மேலும், நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கான விசா கட்டணத்தை A$5,000ஆக உயர்த்தவும் அந்தக் கட்சி உறுதி தெரிவித்து உள்ளது.