இராஜாந்திர பதட்டங்களுக்கு மத்தியில் 27 பிரெஞ்சு சட்டமன்ற உறுப்பினர்களின் விசாக்களை ரத்து செய்த இஸ்ரேல்

இஸ்ரேல் அரசாங்கம் பிரான்சின் 27 இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்துள்ளது.இன்னும் சில நாள்களில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக நடப்பவர்களுக்கு நாட்டிற்குள் அனுமதி இல்லை என்ற சட்டத்தின்கீழ் 27 பேரின் விசாக்களை ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சில நாள்களுக்கு முன்னர் பிரிட்டனின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் அதன் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் இருவரும் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
அண்மையில் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், விரைவில் பாலஸ்தீனத்தை நாடாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இது இஸ்ரேல், பிரான்ஸ் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. மேலும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை நிறுத்த பிரான்ஸ் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்தும் வருகிறது.
விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 17 பேர் பிரான்சின் சுற்றுச்சூழல், கம்மியூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்தவர்கள்.
இஸ்ரேலின் நடவடிக்கை சரியானது இல்லை, இதில் பிரெஞ்சு அதிபர் மெக்ரோன் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜெருசலத்தில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் அழைப்பில் ஐந்து நாள்கள் இஸ்ரேலில் தங்க அந்தக் குழு திட்டமிட்டிருந்தது. பின்னர் பாலஸ்தீனம் செல்லவும் அது திட்டமிட்டிருந்தது. இரு பகுதிகளுக்கும் செல்வது அனைத்துலக ஒத்துழைப்பையும் அமைதி கலாசாரத்தையும் வலுப்படுத்த உதவும் என்று அக்குழு கூறுகிறது.
பிரெஞ்சுக் குழுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே விசாக்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் தற்போது திடீரென இஸ்ரேல் விசா அனுமதியை ரத்து செய்தது வருத்தம் தருவதாக அக்குழு தெரிவித்தது.