சர்ச்சையை கிளப்பிய “மூக்குத்தி அம்மன் 2”…நடிகை குஷ்பு ஆதங்கம்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் இப்படத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
நேரடியாக OTT -யில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான உடனேயே நயன்தாராவுக்கும், உதவி இயக்குநர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தொடர்ந்து இணையத்தில் தகவல் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், தற்போது இது குறித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது எதுவும் உண்மை இல்லை.
படப்பிடிப்பு திட்டமிட்டபடி தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும். உங்கள் ஆசீர்வாதத்தையும் அன்பையும் மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.