மத்திய கிழக்கில் பதற்றம் – அமெரிக்காவின் தாக்குதலில் பலர் பலி

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அவர்கள் செங்கடல் பகுதியில் கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்கர்களுக்கு எதிராக கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தீர்க்கம் நிறைந்த மற்றும் சக்தி வாய்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, விமானந்தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டு சென்றன.
இதன் தொடர்ச்சியாக, ஏமனில் நடந்த வான்வழி தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். இதன்படி, ஏமனின் சனா நகரில் 13 பேர் பலியானார்கள். 9 பேர் காயமடைந்தனர்.
சாடா மாகாணத்தில் நடந்த தாக்குதலில், 11 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேர் குழந்தைகள். ஒருவர் பெண் ஆவார். 14 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.