அமெரிக்காவிடம் வரி விலக்கு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள தென்கொரியா

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள வரிவிதிப்பு நடவடிக்கை ஏப்ரல் மாதம் நடப்பு வரவுள்ளது.
இந்நிலையில், தனது நாட்டுக்கு எதிரான வரிவிதிப்பை கைவிடும்படி தென்கொரிய வர்த்தக அமைச்சர் சியோங் இன் கியோ அமெரிக்க வர்த்தகப் பிரிதிநிதியிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சு சனிக்கிழமை (மார்ச் 15) தெரிவித்துள்ளது.
அவர் இவ்வாரம் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அமெரிக்க வர்த்தக அமைச்சரான ஜேமிசன் கிரீயரை சியோங் சந்தித்ததாக தென்கொரிய அரசு அறிக்கை கூறுகிறது.
புதிதாக பதவியேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்க வர்த்தகப் பங்காளி நாடுகள் மீது ஏப்ரல் 2 முதல் தமது நாட்டுக்கு வரிவிதிக்கும் நாடுகளுக்கு எதிராக பதிலுக்கு வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
முன்னதாக, மார்ச் மாதம் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக்கு எதிராக உயர் வரிவிதிப்பை மேற்கொண்டுள்ள நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று எனக் கூறினார். அமெரிக்கா விதிக்கும் வரியைவிட தென்கொரியா நான்கு மடங்கு அதிக வரி விதிப்பதாக அவர் புகார் கூறினார்.
இதை மறுத்த தென்கொரியா, இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக உடன்பாடு இருப்பதால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 0.79 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படுவதாக விளக்கினார்.