செயற்கை நுண்ணறிவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்

உலகத்தின் அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு எனக் கூறப்படும் ஏ.ஐ தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் உலகையே ஆட்டிப்படைக்கும் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய 100 நபர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.
அந்த 100 பேர் அடங்கிய பட்டியலில் 13 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். தொழில்நுட்பம், அரசியல், கலை என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இதில் இடம்பிடித்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். அந்த வகையில், அப்பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள் குறித்து பார்ப்போம்.
சுந்தர் பிச்சை:
இந்தப் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பதே சுந்தர் பிச்சை தான். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை, கூகுள் மூலம் எவ்வாறு பொதுமக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தலாம் எனக் கருதிய சுந்தர் பிச்சை, அதனை செயல்படுத்தியதன் வாயிலாக இப்பட்டியலில் முதலிடம் பெறுகிறார்.
சத்யா நாதெல்லா:
இதேபோல், மைக்ரோசாஃஃப்டின் சத்யா நாதெல்லாவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஓபன் ஏ.ஐ-யுடன் இணைந்து பிங்ஏஐ மற்றும் கோபைலட் என மைக்ரோசாஃப்ட் சார்பாகவும் செயற்கை நுண்ணறிவில் முக்கிய இடம் வகிக்கிறது.
ரோகித் பிரசாத்:
இப்பட்டியலில், அமேஸான் நிறுவனத்தின் மேம்பாட்டு திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் குழுவை வழிநடத்தும் ரோகித் பிரசாத் முக்கிய பங்கு வகிக்கிறார். ஏனெனில், ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் கடந்த அடுத்தகட்டமாக ஆர்டிஃபிஷியல் ஜெனெரல் இன்டெல்லிஜன்ஸ் (Artificial General Intelligence) என்ற தொழில்நுட்பத்தில் அமெஸான் நிறுவனம் செயலாற்றி வருகிறது.
அர்விந்த் ஸ்ரீநிவாஸ்:
பெர்ப்லெக்ஸிட்டி ஏ.ஐ நிறுவனம் மூலமாக அர்விந்த் ஸ்ரீநிவாஸும் இதில் முக்கிய பங்கு பெறுகிறார். இந்த தளத்தில் கேள்விகள் மூலமாக ஏ.ஐ பதில்களை பெற முடியும். இது கூகுள் பிளேஸ்டோரில் கிடைக்கக் கூடியது.
ஷிவ் ராவ்:
ஷிவ் ராவின் அபிரிட்ஜ் நிறுவனம், மருத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பை மேம்படுத்துகிறது. இவை, மருத்துவ ஆவணப்படுத்தலை ஏ.ஐ மூலம் மூலம் எளிமையாக்குகிறது. இதனடிப்படையில், ஷிவ் ராவும் பட்டியலில் இடம்பெறுகிறார்.
ஆனந்த் விஜய் சிங்:
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தகவல்களை பாதுகாத்து வரும் ப்ரோட்டான் மூலம் ஆனந்த் விஜய் சிங் இந்த பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளார்.
அம்பா கக்:
செயற்கை தொழில்நுட்பத்தின் தவறான செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக, ஏ.ஐ நவ் நிறுவனம் விளங்குகிறது. இதற்கு தேவையான தகவல்கள் அனைத்தும் இந்த நிறுவனம் மூலம் பெறப்படுகிறது. இதன் வாயிலாக அம்பா கக், டைம் இதழின் பட்டியலில் இடம்பெறுகிறார்.
துவாரகேஷ் படேல்:
துவாரகேஷ் படேல், தனது பாட்கேஸ்ட் மூலமாக சாம் பேங்க்மேன், இல்யா சுட்ஸ்கேவர் உள்ளிட்ட பல்வேறு ஏ.ஐ நிபுணர்களை பேட்டி எடுத்துள்ளார். குறிப்பாக, ஜெஃப் பஸாஸ், மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளையும் இவர் பெற்றுள்ளார்.
அமன்தீப் சிங் கில்:
ஐ.நா பொதுச் செயலாளரின் தொழில்நுட்பத் தூதுவராக அமன்தீப் சிங் கில் பணியாற்றுகிறார். தொழில்நுட்ப உலகில் என்ன விதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கலாம் போன்ற பரிந்துரைகளை ஐ.நா பொதுச் செயலாளருக்கு இவர் வழங்கி வருகிறார். முன்னதாக, இவர் இந்திய வெளியுறவுத்துறையிலும் பணியாற்றியுள்ளார்.
அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்:
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில், இந்தியா முன்னணியில் இருக்க பல்வேறு முயற்சிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எடுக்கிறார். இதன் மூலம் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
நந்தன் நிலேகனி:
செயற்கை நுண்ணறிவை மக்கள் பயன்படுத்தும் வகையில் ‘அத்புத் இந்தியா’ என்ற முன்னெடுப்பை எடுத்ததன் மூலம் நந்தன் நிலேகனி முக்கிய இடம் வகிக்கிறார். இவர், இன்ஃபோசிஸ் மற்றும் ஏக்ஸ்டெப் ஆகிய நிறுவனங்களின் துணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனில் கபூர்:
பிரபல பாலிவுட் நடிகரான அனில் கபூரை இந்தப் பட்டியலில் பார்ப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தகவல்களின் அடிப்படையில் புதிய தகவல்களை உருவாக்குவது தான் செயற்கை நுண்ணறிவு. அந்த தகவலின் அடிப்படையில், ஒரு நபரை போலவே ஒரு பிம்பத்தை உருவாக்க முடியும். அந்தப் பயன்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அனில் கபூர், அதில் வெற்றி பெற்றார்.
வினோத் கோஷ்லா:
வினோத் கோஷ்லா, தன்னுடைய முதலீட்டு நிறுவனம் மூலமாக பல்வேறு ஏ.ஐ நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னணி முதலீட்டாளர்களுள் வினோத் கோஷ்லாவும் ஒருவர். தன்னுடைய முதலீடுகள் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வினோத் கோஷ்லா உதவுகிறார்.