இணைய மோசடி நிலையத்திலிருந்து 215 வெளிநாட்டவர்களை விடுவித்த தாய்லாந்து, கம்போடியா காவல்துறையினர்

தாய்லாந்து – கம்போடியா எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகரின் ஒரு கட்டடத்தில் செயல்பட்டு வந்த மோசடி நிலையத்திலிருந்து வெளிநாட்டவர்கள் 215 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இரு நாடுகளின் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைமூலம் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகத் தாய்லாந்து உயரதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 23) தெரிவித்தார்.
தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றில் இணைய மோசடி நிலையங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பணியாற்றுவதற்காக, பல ஆசிய நாடுகளிலிருந்தும் நூறாயிரக்கணக்கானோர் குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, கட்டாயத்தின்பேரில் வேலைசெய்து வருகின்றனர்.
அதன்மூலம் பல பில்லியன் டாலர் வருமானத்தை அவர்கள் ஈட்டுவதாகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில், கம்போடிய எல்லை நகரான போய்ப்பெட்டிலுள்ள ஒரு மூன்று மாடிக் கட்டடத்தில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.அதன்மூலம், 48 இந்தியர்கள், 50 பாகிஸ்தானியர்கள், 109 தாய்லாந்து நாட்டவர், ஐந்து தைவானியர்கள், மூன்று இந்தோனீசியர்கள் ஆகியோர் விடுவிக்கப்பட்டதாகத் தாய்லாந்து அரசாங்கப் பேச்சாளர் ஜிராயு ஹோங்சப் தெரிவித்தார்.
மோசடி நிலையங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.
இதனிடையே, வாங் ஸிங் என்ற சீன நடிகர் வேலைவாய்ப்பு உறுதியின்பேரில் தாய்லாந்திற்கு ஈர்க்கப்பட்டு, பின்னர் மியன்மாரில் உள்ள ஒரு மோசடி நிலையத்தில் வேலை செய்வதற்காகக் கடத்தப்பட்டார்.அண்மையில் அவர் மீட்கப்பட்டதை அடுத்து, மோசடி நிலையங்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடிக்குச் சம்பந்தப்பட்ட நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.