மராத்தியில் பேசாத பேருந்து நடத்துனரை தாக்கிய நால்வர் கைது

மராத்தியில் பயணி ஒருவருக்கு பதிலளிக்காததற்காக அரசு போக்குவரத்து கழக பேருந்தின் நடத்துனரை தாக்கியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்ட தலைமையகத்தின் புறநகர்ப் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
நடத்துனர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சுலேபாவி கிராமத்தில் தனது ஆண் தோழருடன் பேருந்தில் ஏறிய ஒரு பெண் மராத்தியில் பேசியதாக 51 வயதான நடத்துனர் மகாதேவப்பா மல்லப்பா ஹுக்கேரி செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறினார். தனக்கு மராத்தி தெரியாது என்றும் கன்னடத்தில் பேசச் சொன்னதாகவும் ஹுக்கேரி தெரிவித்துள்ளார்.
“எனக்கு மராத்தி தெரியாது என்று நான் சொன்னபோது, நான் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி அந்தப் பெண் என்னை துஷ்பிரயோகம் செய்தார். திடீரென்று ஏராளமானோர் கூடி எதாக்கினர்,” என்று நடத்துனர் குறிப்பிட்டார்.
காயமடைந்த பேருந்து நடத்துனர் பெலகாவி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர் ஆபத்தில் இருந்து தப்பிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.