பிறந்தநாள் விருந்தின் போது ஹைட்ரஜன் பலூன் வெடித்ததால் வியட்நாம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வியட்னாமிய பெண் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு நொடியில் பெரும் அசம்பாவிதமாக மாறியது.ஹைட்ரோஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் பெண்ணுக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் பிப்ரவரி 14ஆம் திகதி நடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் உணவகம் ஒன்றில் கியாங் ஃபாம் என்ற அந்தப் பெண் தமது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்ததாக பாவ் ஹாய் டுவோங் ஊடகம் செய்தி வெளியிட்டது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்றில், கியாங் எரிந்துகொண்டிருந்த மெழுகுவத்திகள் கொண்ட பிறந்தநாள் கேக் ஒன்றை ஒரு கையிலும் கொத்து கொத்தான பலூன்களை மறு கையிலும் பிடித்திருப்பதைக் காண முடிகிறது.
கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர் படங்கள், காணொளி எடுக்க நிற்க, எரிந்துகொண்டிருந்த ஒரு மெழுகுவத்தி மீது ஒரு பலூன் தற்செயலாக பட்டது.அந்த பலூன் உடனே வெடித்ததுடன் பெண்ணின் முகத்தை நோக்கி தீப்பிழம்பு வெடித்தது.
அதிர்ச்சியில் கியாங் கையில் இருந்தவற்றைத் தூக்கி எறிந்ததுடன் இரு கைகளாலும் தமது முகத்தை மூடிக்கொண்டார்.கியாங் பின்னர் கழிவறைக்குச் சென்று தமது தீக்காயங்கள் மீது தண்ணீரைத் தெளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடைய ஹைட்ராஜன் கியாங்கின் கையில் இருந்த பலூன்களில் நிரப்பப்பட்டிருந்தது. தம்மிடம் பலூன்களை விற்றவர் இத்தகைய அபாயம் அடங்கியுள்ளது குறித்து எச்சரிக்கவில்லை என்றார் கியாங்.
இந்நிலையில், தீக்காயங்கள் ஆறியதும் எந்தவொரு நிரந்தரத் தழும்பும் முகத்தில் இருக்காது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், தமது தோல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப மாதங்கள் ஆகும் என்று வருத்தத்துடன் கூறினார் கியாங்.