கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ் தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசா போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளன.