ஹம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தகத்திற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் – நிமல் சிறிபால டி சில்வா உறுதி!
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தெளிவான வர்த்தக நடைமுறைகளைக் கொண்டது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
World Is One News (WION) உடன் பேசிய அவர், குறித்த துறைமுகம் வர்த்தக நோக்கங்களுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
குறித்த செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க வேண்டியிருந்தது. இது குறித்து இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.
இறுதியாக சீனா அதனை கைப்பற்றியது. இது தனியார் துறை கையகப்படுத்தல் ஆகும். இது வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை.
சீனர்களுடனான எங்களின் ஒப்பந்தம், வர்த்தகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். தவிர, எந்தவொரு போருக்கோ அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.