வருண் சக்கரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வாக வாய்ப்பு?
இங்கிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி 14 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு வருண் சக்கரவர்த்தி கடும் சவால்கள் அளித்தார்.
இதனால் அவரை, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என அஸ்வின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் வருண் சக்கரவர்த்தி இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியது இல்லை. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரை நேரடியாக சேர்த்தால் எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும் அதனால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சேர்த்து அவரது திறனை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நாளை (6-ம் தேதி) நாக்பூரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர வலை பயிற்சி செய்தனர். அப்போது வருண் சக்கரவர்த்தியும் கலந்து கொண்டார். இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பந்துகள் வீசினார்.
இதுதொடர்பாக இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “வருண் சக்கரவர்த்தி அணியில் உள்ளார்” என்றார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் போன்றவர்களுக்கு வருண் சக்ரவர்த்தி பந்து வீச வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விரும்பியதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணியை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் மாற்றம் செய்வதற்கான காலக்கெடு வரும் 12-ம் தேதி ஆகும். இதை கருத்தில் கொண்டு வருண் சக்கரவர்த்தியை இந்திய அணியின் வலை பயிற்சியில் கம்பீர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்போதைக்கு இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக ஒருநாள் அணியின் வலைப்பயிற்சியில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்பியது. வருண் சக்கரவர்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. உள்நாட்டு வெள்ளை பந்து கிரிக்கெட் சீசன் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. மார்ச் இறுதியில் தொடங்கும் ஐபிஎல் தொடர் வரை அவருக்கு எந்த பணிகளும் இல்லை. அவர் நல்ல பார்மில் இருக்கிறார், அதைத் தொடர வேண்டும் என்று அணி நிர்வாகத்தினர் விரும்புகிறார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தேர்வுக்குழுவினர் ஏற்கெனவே 4 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளனர். மேலும் அந்த தொடருக்கு முன்னதாக 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே உள்ளன. ஆனால் அணி நிர்வாகம் வருண் சக்கரவர்த்தி வேண்டுமென்றால் நிச்சயம் தேர்வுக்குழு தலைவரிடம் பேச வேண்டும். அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை” என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் 2-வது ரிஸ்ட் ஸ்பின்னர் இல்லாதது வருண் சக்கரவர்த்திக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது ஆட்டங்கள் அனைத்தையும் துபாயில் விளையாடுகிறது. இங்கு கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்தி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவர், அணியில் தனது இடத்தை இழந்திருந்தார்.
ஆனால் அதன் பின்னர் வருண் சக்கரவர்த்தி கணிசமாக தனது திறனை மேம்படுத்திக் கொண்டார். கடந்த வாரம் முடிவடைந்த டி20 தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சை கணிக்க முடியாமல் தடுமாறினார்கள். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில் வங்கதேசம் அணியும் கடந்த அக்டோபரில் நடைபெற்ற இருதரப்பு டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டம் கண்டிருந்தது.
நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணி வீரர்களும் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சை இதுவரை எதிர்கொண்டது இல்லை. இதனால் அவர், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர் தொடரான தேசிய ஒருநாள் போட்டி சாம்பியன்ஷிப்பில் வருண் சக்கரவர்த்தி தமிழ்நாடு அணிக்காக விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.