சஞ்சு சாம்சனுக்கு விரலில் எலும்பு முறிவு – 6 வாரங்கள் விளையாட முடியாத நிலை
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், 6 வாரங்கள் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியின் போது சஞ்சு சாம்சனுக்கு ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சாம்சனின் கை விரலை தாக்கியது.
ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காயம் குணமடைய 6 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால் அவர், ரஞ்சி கோப்பை தொடரில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் கேரளா அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆட்டம் வரும் 8-ம் திகதி முதல் 12-ம் திகதி வரை புனேவில் நடைபெறுகிறது. தற்போதைக்கு திருவனந்தபுரம் திரும்பி உள்ள சாம்சன், தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற விரைவில் செல்ல உள்ளார். சிகிச்சைக்கு முடிந்து தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்தகுதி சான்றிதழ் வழங்கிய பின்னர் சஞ்சு சாம்சன் மீண்டும் களத்துக்கு திரும்புவார். ஐபிஎல் தொடருக்குள் அவர், உடற்தகுதியை எட்டிவிடுவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.