பாகிஸ்தானில் 35 வருடங்களுக்கு பிறகு வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ்

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களும், பாகிஸ்தான் 154 ரன்களும் அடித்தன.
பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து வலுவான இலக்கை நோக்கி பயணித்தது.
66.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெய்ட் 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் மற்றும் நோமன் அலி தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா தலா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
2வது நாள் முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் அடித்திருந்த நிலையில், 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி, 44 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, இதற்கு முன்பு 1990ல் பைசாலாபாத்தில் நடந்த டெஸ்டில் வென்றிருந்தது.
9 விக்கெட்டுகள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வாரிகன் ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.