ஐசிசி ஆடைக் கட்டுப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கும்: பிசிசிஐ செயலாளார்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஐசிசி-யின் ஆடை கட்டுப்பாட்டை இந்தியா கடைபிடிக்கும் என பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களை கருதி பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய மறுப்பு தெரித்ததால், இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் அணியும் சீறுடையில், தொடரை நடத்தும் இடத்தில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது ஐசிசி சீருடை தொடர்பான அனைத்து விதிகளையும் பிசிசிஐ பின்பற்றும். இலட்சினை, ஆடை கட்டுப்பாடு தொடர்பாக மற்ற அணிகள் என்ன செய்தாலும், நாங்கள் விதிமுறைகளை பின்பற்றுவோம். ஐசிசி ஊடக நிகழ்ச்சிகளுக்காக ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது.