செலவுகளை குறைக்கு நோக்கில் ஆயிரக்கணக்கானோரை ஆட்குறைப்பு செய்யவுள்ள BP நிறுவனம்
BP நிறுவனம் அதன் ஊழியரணியில் கிட்டத்தட்ட 5 சதவீதம் அதாவது 4,700 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளது.அதோடு, 3,000க்கும் அதிகமான குத்தகையாளர் வேலைகளையும் அது நீக்குகிறது என்று தலைமை நிர்வாக அதிகாரி மரே அவ்சின்க்ளோஸ் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். பெரும்பாலான செலவுக் குறைப்பு முயற்சிகள் இந்த ஆண்டுக்கும் அதற்கு அப்பாலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதிக பணம் ஈட்டித்தரும் திட்டங்களில் கவனம் செலுத்த, கடந்த ஜூன் மாதத்திலிருந்து நிறுவனம் 30 திட்டங்களை நிறுத்தியுள்ளது அல்லது தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
துறைகளுக்கு இடையே செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பது உட்பட, மின்னிலக்கத் திட்டம் ஒன்றில் முக்கியக் கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அவ்சின்க்ளோஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் காலத்தில், மற்ற முக்கிய எண்ணெய் நிறுவனங்களைக் காட்டிலும், BP பின்தங்கியுள்ளது. ‘ஷெல்’ நிறுவனத்தின் மதிப்பில் பாதிக்கும் குறைவான மதிப்பைக் கொண்டுள்ளது BP.
இதனால், முதலீட்டாளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். வரும் பிப்ரவரியில், எண்ணெய், எரிவாயு தொடர்பில் திரு அவ்சின்க்ளோஸ் மேலும் சில மாற்றங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவை விரைவில் நிறைவேறுமா என்பது குறித்து பல கேள்விகள் எழுகின்றன.